Monday, November 03, 2008
டைட்டானிக் மூழ்கியது ஏன்?
பக்கத்திலேயே வந்து கொண்டிருந்த கப்பலின் ரேடியோ ஆப்பரேட்டருடன், டைட்டானிக் கப்பலின் ரேடியோ ஆப்பரேட்டர் சண்டையிடாமல் இருந்திருந்தால் டைட்டானிக் கப்பல் மூழ்காமல் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று இப்போது வெளியிட்ட ஒரு டாக்குமென்டரியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 96 ஆண்டுகளுக்கு முன் சுமார் 1500 பேரை பலிகொண்ட டைட்டானிக் கப்பல், கடலில் மூழ்கிப்போனதற்கு அந்த கப்பலின் ரேடியோ ஆப்பரேட்டர்தான் காரணம் என்று அது தெரிவிக்கிறது. கடந்த 1912 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் தேதி, பனிப்பாறை ஒன்றில் மோதி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் 25 வயது ஜாக் பிலிப் என்பவர் ரேடியோ ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். அப்போது டைட்டானிக் கப்பலுக்கு சுமார் 20 மைல்களுக்கு அப்பால் எஸ்எஸ் கலிபோர்னியன் என்ற இன்னொரு கப்பலும் வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலுக்கு எதிரே இருக்கும் பனிப்பாறை தெரிந்திருக்கிறது. அதனை டைட்டானிக் கப்பலுக்கு தகவல் சொல்ல முயன்ற போது டைட்டானிக் ஆப்பரேட்டர், அவரது கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் பயணிகளுக்கு டெலிவரி செய்ய வேண்டிய ஏராளமான வாழ்த்து தகவல்களை கையில் வைத்துக்கொண்டு அதைத்தான் அனுப்பிக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் எஸ் எஸ் கலிபோர்னியன் கப்பலில் இருந்த ரேடியோ ஆப்பரேட்டர் சிரில் ஈவன்ஸூடன், டைட்டானிக் ரேடியோ ஆப்பரேட்டர் பிலிப் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த சிரில் ஈவன்ஸ், ரேடியோவை ஆஃப் செய்து விட்டார். அதாவது டைட்டானிக், பனிப்பாறையில் மோதுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்தான் ரேடியோ ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் டைட்டானிக் கப்பலில் இருந்து வந்த அபாய அறிவிப்பு ( எஸ் ஓ எஸ் ), பக்கத்து கப்பலான எஸ் எஸ் கலிபோர்னியனுக்கு வந்து சேரவே இல்லை. இதனால் டைட்டானிக் கடலில் மூழ்கி, 1523 பேர் இறந்திருக்கிறார்கள். ரேடியோ ஆப்பரேட்டர் பிலிப்பும் இறந்து விட்டார். டைட்டானிக், முழுமையாக கடலில் மூழ்குவதற்கு இரண்டு மணி நேரம் ஆகியிருக்கிறது. இந்த தகவல் மட்டும் 20 மைல்களுக்கு அப்பால் வந்து கொண்டிருந்த எஸ் எஸ் கலிபோர்னியனுக்கு தெரிந்திருந்தால் டைட்டானிக்கில் உள்ள அத்தனை பேரையுமே காப்பாற்றி இருக்கலாமாம். த அன்சிங்கபிள் டைட்டானிக் என்ற டாகுமென்டரியில் இந்த தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருந்து நியுயார்க்கிற்கு சென்று கொண்டிருந்த டைட்டானிக், ஏப்ரல் 14, 1912 இரவில் பனிப்பாறையில் மோதியது. மோதிய பின், 2 மணி 40 நிமிடத்தில், அதாவது அடுத்த நாள் அதிகாலையில் அது கடலில் முழுமையாக மூழ்கி இருக்கிறது. அந்த சமயத்தில் டைட்டானிக்தான், உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவி கப்பலாகவும், அதிக தொழில் நுட்பத்தை கொண்டிருந்த கப்பலாகவும் இருந்தது.
நன்றி : தினமலர்
at
8:55:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment